Monday, 20 April 2020

கல்லறைப் பூக்கள்


வறண்ட பூமியும்
இருண்ட வானமும்
வண்ணம் இழந்த
வானவில் போல்
ஆவேனோ சொல்?
என் ஆருயிரே!
வலிகள் மிகுந்த அத்யாயத்தில்
கதவை அடைத்த இந்த காதல்
எனை கடந்தும் சென்றதுவோ? -
மன்னவன் வாடினான்.

எனைப் பிடிக்கவில்லை
என்பதற்கு ஆயிரம்
காரணங்கள்
உன்னிடம் உண்டு.
உனைப் பிடித்ததற்கு என்
உயிரில் கலந்த காதல்
மட்டுமே காரணம்.
ஒருதலை ராகம் கேட்க
பூங்குழலி நீ இல்லை! என
பொன்மகன் வாடினான்.

நிராயுதபாணியாக
நிற்கிறேன்!
காதல் போர்
தொடுக்கிறாள்!
தேன் சொற்கள்
கொண்டு சென்றேன்.
போர் தோற்கத்தான்!
அவ்வாறன்றோ
காதல் வெல்லும்.
தங்கமகன் உருகிநின்றான்.

தித்திக்கும் பார்வை
இல்லற இனிமை
இவற்றுள் நம்பிக்கை அற்றவள்,
வேண்டாம் நான் இனி-என்று
காதல் மறுப்பு செய்துவிட்டாள்.
வேண்டா காதல்
என்றொன்றுண்டோ?
அன்றுடன் அவள் திசை
வராமல் தவிர்த்தது அவன்
பெண்மை போற்றும் கண்ணியம்.

இந்த நிலவு தன் வானைத்
தொலைத்த தறியாமல்
தன்னிலை மறந்ததென்ன!
மலர்கள் கோபம் கொண்டன.
பிரபஞ்சத்தின் நிசப்தத்தில்
அவன் இதயத் துடிப்பு
கேட்கவில்லையே!
நேசத் தாய் தன் சேய்
கொண்டு சென்றாளோ?
கல்லறைப் பூக்கள் கனக்கிறதே!

சரவணன்

No comments:

Post a Comment