வானம் பார்த்த காற்றிற்கு
பூமிமேல் ஏனிந்த ஆசை?
வானம் போல் உயர்வும்,
மேகம் போல் சுதந்திரமும்
நிலத்திற்கு ஏதடி சொல்
என் தென்றல் காற்றே!
உன் பார்வையில்
உற்சாகப்பூ பூக்குதடி
உரசிய தருணங்கள்
மின்சாரம் தாக்குதடி
உன் சினுங்களில்
கரையும் என்மனதை
நின் கரம்கொண்டு
மீட்க மாட்டாயோ?
நெஞ்சைப் பிளக்கும்
மௌனம் வேண்டாம்.
அச்சம் போக்கும்
தெளிவு கொடு போதும்.
வல்லமை படைத்த
மெல்லினமே மயிலே-
உன் பாசமழையில்
என் வாலிபம் கரையுதடி.
முன் சென்மக் காதல்
கொண்டு வந்தாய்;
உன் சிரிப்பால்
எனையே சிறைபிடித்தாய்.
இரவுக் காட்டை எறிக்க
வந்த காட்டுத் தீயே!
மௌனத்தீயில் ஏனடி பின்
வேள்வி வளர்த்தாய்?
இமயத்தின் உச்சியில்
வசிப்பவளுக்கு
மலையடிவாரத்தான் கனவு
எப்படி புரியும்?
நினது வசிப்பிடம்
என் ஆசை மட்டுமே.
அரபிப் பெருங்கடலில் விழுந்த
தமிழ்த்துளி என ஆனேனே!
நிலவைத் தொலைவில்
வைத்த இறைவன்
கல்நெஞ்சன், கள்வன்,
கரிசமற்றவ னன்றோ?
என் காதலை உன் கண்ணியத்திற்காக
மறைத்துப் பழகினேன்.
கனத்துக் கிடக்கிறது
காதல் நெஞ்சம்!
No comments:
Post a Comment