Wednesday, 29 August 2018



வெறுமனே கடந்து போகும்
நாட்கள் அத்தனையிலும்
பொருளற்று பயணம் செய்யும்
புதுயுக நாயகன் நான்.
தனிமைப் பொழுதுகளில்
இருளுடன் போர் தொடுப்பவன்.
கண்களில் கனவுகள் எனக்கில்லை
எதிர்காலம் அதை நம்பியதில்லை.
வெற்றிகள் மீதும் பற்றிருப்
பதாகவும் தெரியவில்லை.
நீ வந்தாய்! வெற்றிடம் நீங்கச்
செய்தாய், மெதுவாய் மாறிய துலகம்.
வெண்ணிலா நீ துணை நிற்பதால்
இரவுகள் இனிமை சேர்க்கிறது.
நிகழ்காலத்தில் நீ வசிப்பதால்
கனவுலகம் கசப்ப தில்லை.
வரும் காலம் அது வந்துவிட்டு போட்டும்
ஒரு வேளை உலக மழிந்தால்
புதுயுகம் நெய்வேன் நீநான் வாழ.
பல தவம் செய்வேன் நின் கரம் சேர.
முற்றுப்புள்ளியில் முடிவதல்ல வாழ்க்கை
முழுமையா யதை வாழ்வதிலே என்றாய்
என்தேவி, எனை மாற்றும் காதலியே!
எனை மாற்றும் காதல் நீயே!

சரவணன்





Wednesday, 8 August 2018

மாலை மயக்கம்


உருகும் பனியிரவில்
வருடும் காற்றைப் போல்
வந்து வந்து செல்லும்
அவள் நினைவுகள்.

மயங்கும் மனவெளியில்
மருகும் வெண்ணிலா போல்
தந்துவிட்டுச் செல்கிறாள்
பலக் கனவுகள்.

உறங்கா என்விழிகளில்
சூரியன் போல் சிவப்பாய்
சிந்திவிட்டுச் சென்றாள்
அவள் சிந்தனைகள்.

புரண்டு படுக்கும்
தேகக்கூட்டினில்
தடம் புரண்டுகிடக்கும்
என்னெஞ்சே சொல்!

அமைதிப் பூங்காவில்
அணுசக்தி ஒப்பந்தமா?
சிறுவனென நினைத்திருந்தேன்;
அணுகுண்டு வைப்பது ஏன்?

காதலென்று கூறிவிடாதே,
கதிகலங்க வைத்துவிடாதே!
காதலினால் படும் சோதனை,
சாதலினும் கடும் வேதனை.

ஈர்க்கும் கூர்விழிகள்
கார்மேகக் குழல் களைத்தால்
பால்போல் வெண்ணிறம்
அவள் கண்ணம்.

பாற்கடலில் கண்டெடுத்த
சிறுமுத்தென பற்கள்.
அல்லிப்பூ தேன் சிந்த
அவள்திரு விதழ்கள்.

ஆபரணத் தங்கம்
அலங்கரிக் கவில்லை
எனினும் அவள் சிரிப்பில்
ஆராதனை செய்யும் அழகு.

பார்வையில் கரைந்த யிந்த
பாவியின் மனம் தினம்
பதுமையின் இடைதனில்
இனி தனைத் தொலைக்கும்.



சரவணன்